பாகன் – திரை விமர்சனம்




குறுக்கு வழியில், சீக்கிரமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஸ்ரீகாந்த், தனது நண்பர்கள் சூரி, பிளாக் பாண்டி ஆகியோருடன் இணைந்து பலபேருடைய பணத்தை அபேஷ் செய்து, பல தொழில்களை தொடங்கி நட்டம் அடைகிறார்.

இந்த நிலையில் பெரிய பணக்காரருடைய பெண்ணை திருமணம் செய்துகொண்டால் சீக்கிரமாக பணக்காரனாகிவிடலாம் என்று யோசித்து, அதற்காக பணக்கார பெண்னான ஜனனி ஐயரை காதலிக்கும், ஸ்ரீகாந்த், காதலையே ஒரு தொழிலாக செய்ய தொடங்குகிறார். சில காட்சிகளுக்குப் பிறகு ஜனனி ஐயரும் ஸ்ரீகாந்தின் காதலை ஏற்கிறார்.

ஜனனி ஐயரின் ரூபத்தில் நமக்கு கோடிகள் பல கிடைக்கப் போகிறது என்று நினைக்கும் ஸ்ரீகாந்துக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில், தனது சொத்துக்களை உதரிவிட்டு வருகிறார் ஜனனி. கோடிகளை அள்ளிட்டு வரவேண்டிய தனது காதலி, வெறும் கையோடு வந்ததைப் பார்த்து அதிர்ந்துபோகும் ஸ்ரீகாந்த், தனக்கு காதலை விட பணம் தான் முக்கியம் என்பதை சொல்லி ஜனனியை நடுத்தெருவில் விட்டுவிடுகிறார்.

தனது காதலை இப்படி கசக்கிப்போட்ட ஸ்ரீகாந்தை இனி வாழ்க்கையில் எப்பவுமே சந்திக்க கூடாது என்று எண்ணி வெளிநாட்டுக்கு பறந்துவிடுகிறார் ஜனனி.
இந்த நிலையில்தான் ஒரு திருப்பமாக ஜனனியின் டைரியை படிக்கும் ஸ்ரீகாந்த், ஜனனி தன்னை சிறுவயதில் இருந்தே காதலித்ததை தெரிந்துகொள்கிறார்.

பணம் ஒன்று தான் வாழ்க்கை என்று எண்ணிய ஸ்ரீகாந்த் தனது தவறுகளை உணர்ந்து மனம் வருந்துகிறார். எப்படியாவது ஜனனியை சந்தித்து அவரிடம் மன்னிப்பு கேட்டு, தனது காதலை சொல்ல நினைத்து வெளிநாட்டுக்கு போக தயாராகும் நிலையில், ஸ்ரீகாந்த் இருக்கும் திருப்பூருக்கே படிப்பு சம்மந்தாமக ஜனனி வருகிறார்.

திருப்பூரில் ஜனனியை சந்திக்கும் ஸ்ரீகாந்த், தனது காதலை புதுப்பித்தாரா? அவரை ஜனனி ஏற்றுகொண்டாரா? என்பதை, முழுக்க முழுக்க காமெடியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் அஸ்லம்.

இப்படத்தின் கதையையே ஒரு சைக்கிள் தான் சொல்கிறது. அந்த சைக்கிளுக்கும் ஸ்ரீகாந்துக்கும் இடையே இருக்கும் பந்தத்தை ஒரு சிறுகதையைப் போல ரொம்ப அழகாக இயக்குநர் அஸ்லம் சொல்லியிருக்கிறார்.

ஸ்ரீகாந்தின் வாழ்க்கையில் அந்த சைக்கிள் பயணிக்கும் விதத்தை சாமர்த்தியமாக கையாண்ட இயக்குநர் முதலில் எப்படியாவது பணக்காரனாக ஆகவேண்டும் என்று ஏங்கும் ஸ்ரீகாந்தை, இரண்டாம் பாதியில் காதலுக்காக ஏங்க வைத்து திரைக்கதையில் விறுவிறுப்பு சேர்த்திருக்கிறார்.

கிராமத்து இளைஞனாக வெகுளித்தனமான நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த். சூரி, பாண்டி என்ற ஜூனியர் காமெடி நடிகர்களை சப்போட்டாக வைத்துகொண்டு ஒட்டு மொத்த தியேட்டரையும் குலுங்க வைத்திருக்கும் ஸ்ரீகாந்த், காமெடி சுமையையும் தன் தலைமீது வைத்துகொண்டு சுமந்திருக்கிறார். எந்த கதாபாத்திரத்திற்கும் தான் தயார் என்பதை காட்சிக்கு காட்சி இமேஜ் பார்க்காமல் நிரூபிக்கும் ஸ்ரீகாந்த், தனது உடம்பை ‘நண்பன்’ படத்தில் இருந்ததை விட இன்னும் மெலிதாக்கியிருக்கிறார்.

முட்ட கண்ணும், ஆளை விழுங்கும் சிரிப்புமாக நம்மை ரசிக்க வைக்கிறது ஜனனி ஐயரின் அழகு. பாலா படத்தில் கிடைக்காத சில வாய்ப்புகள் ஜனனிக்கு இந்த படத்தில் கிடைத்திருக்கிறது.

சூரி, பிளாக் பாண்டி ஆகியோரது காமெடி தியேட்டரையே அதிர வைக்கும் சிரிப்பு சத்தத்தை ஏற்படுத்துகிறது. “உலகத்திற்கே ஜட்டி தச்சி கொடுக்கும் திருப்பூர்ல இருந்துகிட்டு இப்படி ஓட்ட ஜட்டி போட்டு ஏன்டா திருப்பூருக்கு அவமானத்தை ஏற்படுத்துற…” என்று சூரி, பாண்டியைப் பார்த்து கேட்கும் இடத்தில் திரையரங்கமே சிரிப்பால் அதிர்ந்துப் போகிறது. இதுபோல பல காட்சிகளில் இவர்களது காமெடி பாஸ் மார்க் வாங்கியிருக்கிறது.

‘காஞ்சனா’ படத்திற்குப் பிறகு கோவை சரளா, தமிழக மக்களை இப்படத்தின் மூலம் சிரிக்க வைத்திருக்கிறார். இவருடன் இணைந்து ஸ்ரீகாந்துக்கு அப்பாவாக நடித்த நடிகர், அனுமோகன் ஆகியோரும் அவ்வப்போது நம்மை கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள். வில்லனாக சில காட்சிகளில் வந்தாலும் தனது வேலை சரியாக செய்திருக்கிறார் இயக்குநர் வெங்கடேஷ்.

ஜேம்ஸ் வசந்தனின் இசையில் புரியவில்லை என்றாலும் “சம்பா சம்பா…” பாடல் முனுமுனுக்க வைக்கிறது. மற்றப் பாடல்கள் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது.
லக்ஷ்மணின் ஒளிப்பதிவில் சாதரண லொக்கேஷன்கள் கூட பிரமாண்டாக தெரிகிறது. பாடல் காட்சிகளை படமாக்கிய விதமும், தேர்வு செய்த லொக்கேஷன்களும் பிரமாதம்.
காட்சிக்கு காட்சி ரசிகர்கள் சிரிக்க வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து இயக்குநர் அஸ்லம் திரைக்கதை அமைத்திருந்தாலும், குறுக்கு வழியில் முன்னேற நினைப்பவர்களுக்கு ஒரு நேர்மையான வழியை காண்பித்து மெசஜ் ஒன்றையும் சொல்லியிருக்கிறார்.

Comments

Popular posts from this blog

The best mobile phones in 2013 to buy Full reviews

How iOS 7 Style Calculator Get On Android App

நடிகை டாப்ஸிக்காக அடிதடி